Wednesday, April 11, 2007

வியட்நாமின் சரித்திரத்தை படித்த பொழுது....

எங்கள் சுதந்திரம்...

கால தேவன் உறங்கிப் போன நாழி ஒன்றில்
காற்றின் கயிற்றினை பற்றி என்னுள் ஒருவன்
கீழிழுக்கும் பருமனை உதறித்தள்ளி மேலெழும்ப
உறக்கம் கலைந்து நடந்திடும் போர்தன்னை ரசிக்கலானேன்!

சரீரச்சிறையினை உடைத்தெறிந்த மகிழ்ச்சியில் நான்.
உடைத்து எழும்பியவனை பார்த்து ஏங்கியவண்ணம் இன்னொரு நான்.
இது எப்படி சாத்தியமென்று எண்ணியவாறு இன்னுமொரு நான்.
குழாயடிச்சண்டை போல ஒவ்வொருவனும் போட்டியிட்டான் - என்னுள்.

பன்பெரும் படைகளை வென்ற சோழனை போல
மேலெழும்பியவன் பிறனை வென்று கொக்கரிக்க,
நானும் ஆடை களைந்து, பருமன் தொலைத்து,
திரியினின்று வளரும் தீபம் போல அவனை தொடர்ந்தேன்..

புல்வெளியின் நீளமும் அகலமும் பரவி விரிந்து.
மேல் வந்த மேகத்தை விரைந்து சந்தித்து,
புதிதாய் பிறந்த மழைத்துளியுடன் சல்லாபம் செய்து
களைத்து போனதும் புவியை கண்டு விரைந்தோம்.

எம்மை கூண்டிலடைத்து, எங்கள் கிராமங்களை எறிய விட்டு,
சுதந்திர நாட்டை நிறுவியதாக மார்தட்டும் அன்பரே கேளும்!
பொழிந்த குண்டுமழையில் செவிடாய் போன உங்கள் காதுகளில்
சிறிதேனும் கேட்கும் திறனிருந்தால், கூர்தீட்டி கேளும்!

கொடுத்த கூலிக்கு யோசிக்கும் உம் நாட்டு வீணர்களுக்கு
எடுத்த அரிப்பை போக்க வளரும் செடியல்ல சுதந்திரம்.
வார்த்தைக்கு வார்த்தை வர்த்தகம் பேசும் உமது வாய்க்கு
ஒய்வில் அசை போட கிடைத்த வழிப்பண்டமல்ல சுதந்திரம்.

மனிதரை உடலாக எண்ணும், தசையின் அழிவை கண்டஞ்சும்
உங்களவர்க்கு புரிந்திட, ஒரு மரணமாவது வேண்டும்-எங்கள் சுதந்திரம்.
சரீரத்தின் ஆயுட்கைதியாக கருதும், விடும் மூச்சினை கைவிலங்காக அணியும்,
எங்களவரின் மரணத்தில், ஒரு துளியாவது விளங்கிடும்-எங்கள் சுதந்திரம்.

2 comments:

The Lonely Backpacker said...

hmm... what was the inspiration for this ?

ur tamil is too good.. the choice of words - just amazing.... after long time i read a beautiful post...

Arun Appadurai said...

வியட்நாமின் சரித்திரம் படித்த பொழுது!!:) எழுதியிருந்தேனே!