Saturday, July 29, 2006

ஒரு ஆலமரத்தின் கதை

டமார்!!

கொல்லை புறத்தில் இருந்து ஓரு பெரிய சத்தம்! மாடியில் தூங்கி கொண்டிருந்தவன் அதிர்ந்து எழுந்தேன். தொடர்ந்து திமு திமு வென்று ஆட்கள் ஓடி வரும் சத்தம்!மதிய வேளையில் இது என்ன புது கூத்து? யாரிவர்கள்? மாரிக்கால மழை போல மனம் பல கேள்விகளை பொழிந்தது. வாழ்வில் முக்கியமான கணங்கள் நிகழும் முன்னரே மனதிற்கு தெரிந்து விடுமாம்.ஏதொ பத்திரிக்கை ஒன்றில் படித்தது நினைவிற்கு வந்தது. அடுத்த சில கணங்கள் என் வாழ்வின் அதி முக்கியமான தருணங்கள் என்று என் மனம் சத்தியம் செய்யாத குறையாக அடித்து சொல்லியது. நல்லது! இந்த எண்ணவோட்டத்தை இன்றிரவு பதிவு செய்யவேண்டும். கடந்த மூன்று நாட்களாகவே எனது வாழ்க்கையானது விந்தையானதும் விளக்கங்களுக்கப்பாற்பட்டதுமான பல நிகழ்வுகளை நிகழ்த்தி வருகின்றது. நேற்று முந்தைய தினத்திலிருந்து பூமியானது ஒரு மிகப்பெரிய ஓளிப்போர்வையால் தன்னை மூடிக்கொண்டு காட்சியளிக்கின்றது.எங்கு பார்க்கிலும் ஓளி!அழகான, வெண்மையான,தூய்மையான ஓளி!மக்கள்,மரம்,செடி,கொடி அனைத்தையும் தன்னுள் அடக்கிக் காட்சியளிக்கும் பேரொளி! இவ்வாறு ஒரு கனவுலோகத்தில் வாழ்ந்து வந்தாலும், ஊர்மக்களின் போக்கில் எற்பட்ட மாற்றத்தை கவனிக்க தவறவில்லை நான். எனது வீட்டின் அருகே கடை வைத்திருக்கும் தோழர், வயலில் வேலை செய்யும் சகோதரர்கள், ஆசிரியர், அனைவரின் கண்களிலும் ஒரு மருட்சி. அனைவரும் என்னை சந்திப்பதை தவிர்பதற்காக அதீத முயற்சி எடுத்துக்கொண்டதையும் கவனித்தேன். சட சட வென பாத்திரங்கள் உருளும் சத்தம்! ஓடி வருபவரகள் யாராயினும், என் மனைவியின் கடுஞ்சொற்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டி இருக்குமென எண்ணியவாறே அவள் படுத்திருந்த இடத்தை நோக்கினேன்.அவளும் சத்தம் கேட்டு எழுந்து விட்டிருந்தாள்.காலத்திற்கு எதிரான போராட்டத்தில் நிமிர்ந்த நடை மற்றும், நேர் கொண்ட பார்வை, இவற்றை தொலைத்து, தள்ளாடியவாறு மழலை நடை போட்டுச் செல்லும் என் மனைவி!!எவ்வளவு வேகமாக செல்கிறது இந்தக் காலச்சக்கிரம்.!!மீண்டும் அவளை நோக்கினேன்.அட!இது என்ன? பார்வை மங்குகிறதே?இரத்த அழுத்தம் அதிகரித்திருக்குமோ? சிரசாசனம் செய்வதை வயலுக்கு மருந்தடிப்பதன் காரணமாக நிறுத்தி வைத்தது சரியில்லை..மீண்டும் தொடரவேண்டும்.ஆனால் இது இரத்த அழுத்தத்தால் மங்குவது போல் இல்லையே?சுற்றிலும் பார்த்தேன். எங்கு பார்க்கிலும் காட்சிகள் கருப்பு வெள்ளையில் வர்ணமற்று தெரிந்தன.என்ன இது? புதிராக இருக்கிறதே!யோசித்துக் கொண்டிருக்கும் போதே வர்ணங்கள் திரும்பி வந்தன..அட!இது நான் படுத்திருந்த இடம் போல் இல்லையே! இது!இது!.....

காலச்சக்கிரமானது ஒரே சீரில் உருண்டோடி செல்வதால், நமது நினைவுகளை மனதில் கோர்வை படுத்தி வைத்து கொள்ள முடிகிறது.கனவுகளை பற்றி எப்பொழுதாவது எண்ணியதுண்டா நீங்கள்? கனவுகளில், காலமானது ஓரே சீரில் செல்வதுமில்லை. அவைகள் கோர்வையாக நிகழ்வதுமில்லை.ஆகவே தான் கனவுகள் உறக்க தேவதையின் காதலர்களாகவே இருந்து, விழிப்பு கணவன் வந்தவுடன் நினைவுகளிலிருந்து நீக்கப்படுகின்றன.என் கண் முன்னே நிகழும் இந்த கணமானது அவ்வாறு ஒரு கனவாகவே இருக்கக்வேண்டுமென்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். ஆயினும், மனம் அதனை நம்ப மறுத்தது.சுற்றிலும் பார்த்தேன். அழகான இந்த கண்ணாடிச் சாளரங்கள், அவற்றில் வரையப்பட்ட சித்திரங்களின் வர்ணங்களினூடே ஊடூருவும் ஓளி,அது நிகழ்த்தும் பொம்மலாட்டம்,மனதை கவரும் இந்த இன்னிசை, இவற்றையெல்லாம் முன்பு எங்கோ ரசித்திருப்பதாக தோன்றியது.ஆம்!இது என் திருமண நாள்! அதோ! நான் வருகின்றேன். இளமை தந்த செருக்கோடு, அதுவரை எனது வாழ்வின் அனுபவங்கள் பரிசளித்த முதிர்வு கைசேர்த்துக் கொள்ள, மனித உருவில் வந்த கடவுளர் போல், ஏறுநடை போட்டு வந்த என்னை பார்க்கின்றேன். என்னை அறியாமல், எனக்குள் ஒரு கர்வம் பிறக்கின்றது.அத்தோடு, மார்கழி மாதத்தை நினைக்கையில் அழையா விருந்தாளியாக வந்தமரும் அதிகாலைப பனி பற்றிய நினைவு போல், அப்பொழுதைய காலத்தைப் பற்றிய நினைவு வருகின்றது. அது...எங்கள் பாரத தேசமென்று நாங்கள் தோள் தட்டிய காலம். சமுக முற்போக்கு குறித்த கருத்துகள், அந்த சமயத்தில்தான் என் மனதில் துளிர்விட துவங்கி இருந்தன.அந்த பிரளயமான சமயத்தில்,அடுத்த நாளைப் பற்றி எதுவும் நிச்சயமாக தெரியாத அந்த தருணத்தில்,......நான் காதல் வயப்பட்டேன்.

என் மனதை கவர்ந்த அவள், ஒரு ஆசிரியை.அறிவிற் சிறந்த ஆசிரியை.பெண்கள் இப்படி வாழவேண்டும், அப்படி வாழவேண்டுமென்று தேசத்தில் அது வரை பிறந்த மரியாதைக்குரிய குடிமகன்கள், செய்வதற்கு வேலை இல்லாத ஒரே காரணத்தால்,எழுதி வைத்த கனம் பொருந்திய சட்டதிட்டங்களை பொருட்படுத்தாமல், மனித இனத்தின் பொது பிரதிநிதியாக வாழ முற்பட்ட என்னவளின் மீது எனக்கு காதல் ஏற்பட்டதில் வியப்பேதுமில்லை.இப்படியாக பலவாறு சிந்தனைகள் மனதில் ஒடிய வேளையில்,முதுகில் நறுக்கென்று கட்டெறும்பு கடித்தாற்போல் ஒரு வலி!அனிச்சையாக வலிவந்த இடத்தை தடவியவாறே, திரும்பி பார்த்தேன். முகத்தை திருப்பியவாறு என் காவியத்தின் நாயகி.ஆயினும்,அவள் இதழில் ஓடிய குறும்புன்னகை சாட்சியம் சொல்லியது,கிள்ளியது அவளென்று!!தேர்தல் பொழுதில்,அரசியல்வாதி அளிக்கும் வாக்குறுதி போல, எல்லா மதங்களூம்,மக்களுக்கு போதிக்கும் சொர்க்கத்தின் மேல் எனக்கு நம்பிக்கையில்லை.ஆயினும்,அப்படி ஒன்று இருந்தால், அது இந்த தருணத்தை விட மகிழ்ச்சியளிக்குமா என்பது சந்தேகமே!!தூரத்தில் நாய் ஓன்று குலைக்கும் சத்தம்!!ஆனால் இது என்ன?,அந்தச் சத்தமானது,நெருங்கிக் கொண்டே வருகிறதே!!.இது என்னுடைய நாயின் சத்தம் அல்லவா? சட்டென்று காட்சி மாறியது!! மீண்டும் என் படுக்கையறையில் இருந்தேன்.உண்மையாகவே எனது நாய் ஓடி வருபவர்களை நோக்கி குலைத்திருக்கிறது!!சற்றுமுன் நிகழ்ந்த காட்சியினை நினைத்தேன்.விழித்திருக்கும்போதே கனவுகள் வருகின்றனவே! விந்தை! விந்தை!!

தொம்மென்று பருத்த எதுவொ விழும் சத்தம்.ஓடிவருபவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும். ஏனிந்த அவசரம்?பார்த்து வரக்கூடாது? முகம் தெரியாக அந்த மனிதனை கடிந்து கொண்டேன்.கடிந்து கொண்டிருக்கும் பொழுதே காட்சிகள் வர்ணங்களை தொலைத்தன!சரிதான்..இப்பொழுது என்ன?எண்ணிக் கொண்டிருக்கும் போதே,மனதில் சருகில் பற்றிய நெருப்பு போல் கோபம் பெருக்கெடுத்து ஓடியது! மீண்டும் வர்ணங்கள் திரும்பி வந்தன.கண் முன்னே என் மனைவி.கோபத்துடன் ஏதோ சொல்கிறாள்.என்ன கூறுகிறாள் என்று கேட்போமா?

நீங்க போங்க ஐயா!!மவராசனா போயிட்டு வாங்க!நாட்டுக்காக போராடனும்னு போறிக! நல்ல விசயந்தேன்..ஆனா போகனும்னு நெனச்சவுக என்னய ஏன் கட்டிக்கிட்டிக?நீங்க பாட்டுக்கு நேதாஜி கூப்பிட்டாகனு போயிறுவீக! உங்களுக்காக தெனந்தெனம் அழுது சாக என்னால முடியாது சாமீ!அதுக்கு இப்பவே செத்து போறன்..உங்களுக்கும் பாரமில்லாம இருக்கும்..

என்ன தேவகி சொல்ற? நீ பேசர பேச்சா இது? என்னய விட நீதான நாடு நாடு னு துடியா துடிப்ப! இப்ப மாறிப் பேசுற? இது தான் சமயம் தேவகி.இப்ப நாம சேர்ந்து போராடுனா சொதந்திரம் கெடச்சிடும்னு போஸ் சொல்றாரு.வாழ்க்கையில எதாவது பண்ணனும் தேவகி!கூட்டத்தோடு கூட்டமா நாமும் பிறந்தோம்,வளர்ந்தோம்,செத்தோம்னு இருக்கிறது வாழ்க்கையா?ஆடும் மாடும் கூட அப்படித்தான் வாழுது..மனுஷனா பொறந்து என்ன பண்ணினோம்?

எல்லாம் பேசுறதுக்கு நல்லா இருக்கு! நடப்புக்கு சரிப்பட்டு வருமா? நான் புள்ளத்தாச்சி.போதாக்குறைக்கு அப்பா வேற!சண்ட வந்ததில இருந்து வேலயும் இப்பொவொ அப்பவோனு இருக்கு.ஆனா இதல்லாம் உங்களுக்கு பெரிசா? வீட்டுக்கு சண்ட போடுறதுல என்ன கௌரவம் இருக்கு? நாட்டுக்கு சண்ட போட்டாத்தான மரியாத!நீங்க போயிட்டு வாங்க சாமி!நான் கிறுக்கச்சி!ஏதோ ஒளரிக் கொட்டுறேன்.கேட்டுறாதிக!பொல்லாப்பாயிடப் போது!

என்ன தேவகி? ஒனக்கும் பிடிக்கும்னுதான கேட்டேன்.பிடிக்கலன்னு சொல்லிட்ட!நானும் போப்போறதில்ல..இதுக்கு போயி ஏன் கோவப்படுற?எல்லயில போட்டாத்தான் சண்டயா? உள்ள இருந்தே நம்மால முடிஞ்சத பண்ணலாம்!சரி விடு.நான் கம்மாய்க்கரய்க்கு போயிட்டு வாரேன்.மாமா வந்தாகன்னா இருக்க சொல்லு! இந்தா வந்திர்ரேன்..

என்று எளிதாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாலும், மனது கேட்க மறுத்தது.கம்மாய்க்கரையில் வைத்து அழுகின்றேன்.ஒரு வேளை திருமணம் செய்திருக்கக்கூடாதோ? அவளும் என்னைப் போலவே நாட்டின் மீது பற்றுடையவள் என்பதால் தானே காதலித்தேன்.தேசம் எங்கள் காதலை வளர்க்குமென்றல்லவா கனவு கண்டேன். இருள் கம்மிக் கொண்டு வந்தது.எனது மனதின் நிலையும் அது தானோ?

மீண்டும் விழித்தேன்.எனது படுக்கையறை தெரிந்தது!சரிதான்.இன்று கனவுகளின் தினம் போலிருக்கிறது!கீழ் வீட்டில் மனிதர்கள் ஓடும் சத்தம் இப்பொழுது இன்னும் பலமாகக் கேட்டது!காகம் ஒன்று கரையும் சத்தம்!கேட்டுக் கொண்டிருக்கும் போதே மீண்டும் கனவுலகிற்கு சென்றேன். அதே கம்மாய்க் கரை!அதோ!நான் அமர்ந்திருக்கின்றேன்.என் மனைவிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.

நீ பண்றது சரியில்ல கந்தா!நீ நெனச்ச மாதிரி அவ இருந்தா மட்டும்தான் காதலிப்பேன்னு சொல்றது மகா தப்பு!அது காதல் இல்ல. அவள கட்டுக்குள்ள அடக்கி உன்னுடய சொத்தா உரிமை கொண்டாட நெனக்கிற! அவ முதல்ல ஒரு மனுசி, அவளுக்கும் நெறய ஆசாபாசம் இருக்கும்றத மறந்துடாத!! யாரும் யாரையும் மாற்றுவதற்கான கருவியில்ல காதல்.ஒருவரை சுதந்திரமாக வானில் பறக்க விட்டு அவங்க வளர்ச்சியில சந்தோஷபடுறதே காதல்.போயி அவகிட்ட முன்ன மாதிரி பழைய கந்தனா பழகு..

என்று என் மனம் எனக்கு சம்மட்டியடித்தது!சில நேரங்களில் சுழ்நிலைகளின் வெப்பத்தில் நாம் நம்மை மறந்து தீங்கு செய்ய துணிகின்றோம்.பின்னர் அத் தீமை வரைந்த வட்டத்தினை உடைத்து வெளிவர துணிவில்லாமல்,அதனுள்ளேயே புகைந்து, மருண்டு,செல்லரித்து,வாழ்க்கையின் அதிமுக்கிய நிமிடங்களை வீணடிக்கின்றோம்.சற்றே அமர்ந்து சிந்தனை செய்தோமானால், நாம் யாரென்று மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டொமேயானால்,வாழ்க்கையில் முக்கியமான அம்சங்களை மீண்டும் வலியுறுத்திக்கொண்டொமேயானால்,நமது துன்பங்ளின் மூலக்காரணம் புலப்படும்.பின்னர் அக்காரணத்தை விலக்க வழியும் புரியும்.நல்லது!இதனை நாளேட்டில் பதிய வேண்டும்!இத்தகைய சிந்தனாய்வு நடத்திய பின்னர்,மனம் இலகுவாகி,மீண்டும் மகிழ்ச்சி எனும் வானில் எழும்பியது.

காலடிச்சத்தம் இப்பொழுது படிக்கட்டில் கேட்கிறது!சற்றே திரும்பி சாளரத்தின் வழியாக கீழே பார்க்கின்றேன்.அதோ!படியில் முதலாவதாக ஏறி வருபவனின் உருவம் தெரிகிறது.யாரது! ராமசாமியின் மகன் போல் இருக்கிறானே? ஓடிவருபவர்களின் பருமனில்,படிக்கட்டு கிறிச்சிட்டது!நானே வடிவமைத்து பர்மாவில் இருந்து தேக்குமரம் வரவழைத்து செய்த படிக்கட்டு! நமது படைப்புகளை பார்க்கின்ற பொழுது நமக்கு வருகின்ற பெருமையுணர்ச்சிக்கு இருக்கிறது பாருங்கள்! அதற்கு ஈடு இணையே இல்லை! இந்த எண்ணம் முதலில் வந்ததா இல்லை எனது கனவு முதலில் வந்ததா என்று தெரியவில்லை.சரியாகச் சொல்லப் போனால், மனோவேகம் என்பார்களே! அந்த வேகத்தில், நான் எனது நிகழ்கால உலகத்தில் இருந்து கனவுலகிற்கு சென்று விட்டிருந்தேன்.

அதே படிக்கட்டின் நடுவில் ஒரு படியில் அமர்ந்து இருந்தேன்! எனக்கு கீழேயுள்ள மற்றொரு படிக்கட்டில்....இல்லை..இது இருக்கமுடியாது!எனது ஆத்மநண்பன் பைரவன் எப்படி இங்கே அமர்ந்திருக்கிறான்? சாதிக்கலவரத்தில், ஆட்கணக்கில் எண்ணம் குறைந்துவிடக்கூடாது என்கிற கரிசனத்தில்,வயோதிகனென்றும் பாராமல்,சென்ற வாரம் படுகொலை செய்யப்பட்டானே! அவன் புதையுண்ட இடத்தில் நான் வெகு நேரம் அழுதபடி நின்றது இப்பொழுதும் நினைவிலிருக்கிறதே!கண்ணிமைக்கும் நேரத்தில் கனவுலகும்,நிகழுலகும் ஒரு நூறாண்டுப் போர் நடத்தி முடித்தன! எப்பொழுதும் போல கனவுலகே வென்றது.பைரவனும் நானும் ஒரு விவாகப்போரில் ஈடுபட்டிருந்தோம்.

தோழர்! (பைரவன் என்னை அப்படித்தான் கூப்பிடுவான.இந்த பாழாய்ப்போன சாதியின் பெயரால் தலைமுறை தலைமுறையாக அடக்கி ஆளப்பட்டதின் விளைவாக,என்னை பெயர் சொல்லி கூப்பிடவே கூச்சப்பட்ட பைரவனை,தோழர் என்று அழைக்க வைக்க நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை!!) !நீங்க என்னதான் சொன்னாலும், ஊர எதுத்து இன்னோரு டீக்கடை வைக்கதுல எனக்கு உடன்பாடு இல்ல!காலம் காலமா ஊருக்குள்ள அமைதியா வாழ்ந்துட்டு வாறோம்.இப்ப எங்களுக்கு என்ன கெட்டுப் போச்சு!? நாங்க பாட்டுக்கு எங்க சோழிய பாக்கோம்.மேல்சாதிக்காரவுக அவுக சோழிய பாக்காக!அவக வழியில வராத வரைக்கும் படுக்க கூர, திங்க சோறுன்னு வாழ்க்கச்சக்கரம் ஓடுது.புரச்சி கிரச்சி னு எதும் பண்ணப் போயி இருக்கிற லங்கோடயும் பறி கொடுத்து அம்மணமா திரியச் சொல்லுதியளா? அப்படியேனாலும் செரட்டைல டீ குடிக்கதுக்கு என்ன வலிக்குதா?செரட்டைல குடிச்சா என்ன,கிளாஸ் தம்ளர்ல குடிச்சா என்ன?டீ டீதான தோழர்?

பைரவன்!பிரச்சன செரட்டைல டீ குடிக்கிறதுல இல்ல! உனக்கு செரட்டைல குடிக்கனும்னா தாராளமா குடி.தப்பில்ல.ஆனா அது உன்னோட சொந்த முடிவா இருக்கனும்.வெளில இருந்து யாரும் திணிக்க கூடாது.ஒரு சாதிக்கு கிளாஸ் டம்ளர், இன்னோரு சாதிக்கு செரட்டைல தர்றது எந்த விதத்துல நியாயம்?மனுஷன மனுஷன் மதிக்கிறதுதான் முதலாவது மனுஷத்தன்மை. அது கூட இல்லனா, என்ன அமைதியா வாழ்ந்து என்ன புரொசனம்?இத பிரிட்டிஷ்காரன் பண்ணலன்னுதான அவன எதுத்து போராடுனோம்.இப்ப நமக்குள்ளேயே இத்தன பிரிவு வச்சிக்கிட்டு பாகுபாடு பாத்தா அப்புறம் நமக்கும் பிரிட்டிஷ்காரனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? அப்புறமா இன்னொன்னு சொல்றேன்! தப்பா நெனக்காத!படுக்க கூர, திங்க சோறுனு வாழ்றது மனுச சாதி யில்ல.நி இப்படி வாழ்ந்தின்னா அப்புறம் மேல்சாதிக்காரன் அவன் பண்றத நியாயப்படுத்துவான்.நம்ம மேல மொதல்ல நமக்கு மதிப்பு வரனும்.இல்லாட்டி மத்தவங்க யாரும் மதிக்க மாட்டாங்க!

நீங்க சொல்றது சரிதாந் தோழர்! ஆனா அவுகள எதுத்து என்ன பண்ண முடியும்? ஊரே அவுக கைல தான் இருக்கு!நமக்கும் குழந்தை குட்டினு இருக்கு! சாகுற வரைக்கும் எதுத்து போராட முடியாதுல்ல தோழர்!

எதுத்து போராட இது போர் இல்ல பைரவன்.சாதின்றது அறியாமைனால விளையிற ஒரு நோய் மாதிரி! ஊரே கூடி முயலுக்கு மூனு கால்தான்னு முடிவு பண்ணி தலமுறை தலமுறையா சொல்லி கொடுத்தா, அப்புறமா அவங்க வழி வர்ற வாரிசுகள்லாம் முயலுக்கு நாலு கால்னு கண்ணால பார்த்தாலும் கூட அத நம்பாம,பார்க்கிற முயலுக்கு எல்லாம் ஒரு காலை வெட்ட பாப்பாங்க. அந்த கூத்துதான் இங்க நடக்குது. இதற்கு மருந்து ஆயுதமேந்தி போராடுறதுல இல்ல.அந்த மூடநம்பிக்கைகள எல்லாம் உடச்சி வாழ்ந்து காட்டுறது தான்.பிரச்சினைக்கு முடிவு அவங்க டீக்கடையை நொறுக்கிறதில்ல. அவங்க டீக்கடை நல்லபடியா நடக்கட்டும்.நாமளும் ஒரு டீக்கடை ஆரம்பிப்போம்.அதுல எல்லாருக்கும் ஒரே மாதிரி கிளாஸ்ல டீ தருவோம்.நம்மள பாத்து நெறய பேரு திருந்துவாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு.

கணநேரத்தில் என் படுக்கையில் இருந்தேன்!என்னதான் கனவென்றாலும், பைரவனை பார்த்த திருப்தி மனசெல்லாம் நிறைந்து நின்றது.காலடிச்சத்தங்கள் இப்பொழுது மாடி வாசலில் கேட்டன! வருபவர்கள் யாரென்று பார்க்க முயற்சி செய்தேன்.அதோ!அவர்கள் தெரிகின்றனர்..நான்கு பேர்! பார்ப்பதற்கு பதினேழு பதினெட்டு வயதினர் போல் தெரிந்தனர்.அனால், பார்த்த முகங்கள் போலில்லையே! வருபவர்களில் ஒருவனின் கையில் அரிவாள் ஒன்று மின்னியது.அந்த நிமிடத்தில், மனதில் பளிச்சென்று ஒரு மின்னல் வெட்டியது போல் அவர்கள் யாரேன்பதும், எதற்காக வந்திருக்கின்றனறென்றும் புரிய வந்தது.எனக்கு நானே மெல்ல சிரித்துக் கொண்டேன். இதுவரை எனக்கு ஏற்பட்ட புதிரான சம்பவங்களுக்கெல்லாம் விடை தெரிகின்றது.ஆனால் நான் சிரித்தது அதற்காக மட்டுமல்ல.

ஒருவன் எப்பேர்ப்பட்ட பணக்காரனாயினும் சரி, ஏழையாகினும் சரி, புண்ணியாவானாகினும் சரி, கொடியவனாகினும் சரி. மூப்படையும் காலத்தில் அவனுக்குள் ஒலிக்கும் ஒரே கேள்வி என்ன தெரியுமா உங்களுக்கு? ' என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நான் இவ்வாறேல்லாம் வாழ்ந்து வந்தேன்.இதற்கு முற்றுப்புள்ளி எவ்வாறிருக்கும்?' என்பதுதான்.நானும் அவ்வாறு பல இரவுகள் முழித்திருந்து சிந்தித்திருக்கின்றேன்.நிலவினை மறைத்த மேகங்கள் போல இது வரை நிலவின் கதிர்களை மட்டுமே பார்த்து வந்தேன். ஆனால் இன்றொ மேகங்கள் விலகி முழுநிலா தெரிகின்றது.அதனை எண்ணி சிரித்தேன். கடைசியாக என் மகளை பார்க்க சென்ற பொழுது அவள் என்னிடம் 'உங்களுக்கு எங்கள விட கிராமம் முக்கியமாயிடுச்சாப்பா.உங்களுக்கு எதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா நாங்கள்லாம் என்ன செய்வோம்?' என்று கேட்க, அதற்கு பதில் தெரியாமல் அவளை விழித்துப் பார்த்தேன். இன்றோ அக்கேள்விக்கு என்னிடம் பதிலிருக்கிறது.ஆனால் அவளுக்கு தெரியப்படுத்த வழியில்லை.

வருபவர்களிடம் என் மனைவி ஏதோ கூறி தடுக்க முயலுகிறாள். அவனோ வந்த வேகத்தில் அவளை அருகிலுள்ள அறையினுள் தள்ளுகின்றான்.அவள் தடுமாறி உள்ளே விழுகிறாள்.ஓடிவருபவனை பார்க்கின்றேன்.என்னையறியாமல் என்னுள் ஒரு குற்றவுணர்ச்சி கிளம்புகின்றது. வாழ்வின் வசந்தங்களை, இன்பங்களை, மகிழ்ச்சிகளை அனுபவிக்க வேண்டிய இள வயதில், இவனை ஆயுதமேந்தும் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டதல்லவா எங்கள் தலைமுறை? வெறும் பேச்சளவோடு நின்று விட்ட சாதியொழிப்பு, பகுத்தறிவு போன்ற மேன்தொங்கிய கருத்துகளெல்லாம், சற்றுமேயானாலும் நடைவாழ்வில் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமேயானால், இன்றைய இவனது கோபத்திற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்குமல்லவா?பச்சை மண்ணினைப் போல இருந்தவனை, சரியான வழியில் நெறிப்படுத்தவுமல்லவா தவறிவிட்டோம்!! மன்னித்து விடப்பா! உனக்கு வாய்த்திருக்க வேண்டிய அழகான எதிர்காலத்தினை, எங்கள் செயலின்மையால் செலவழித்துவிட்டோம்.இந்தக் கொடுமைகளெல்லாம் எங்களோடு போகட்டும். உங்கள் காலத்திலாவது, அன்பினால் மட்டுமே கட்டப்பட்ட சமுதாயத்தினை உருவாக்குங்கள்.

இவ்வாறாக யோசித்து, மன்னிப்பு கேட்கும் தோரணையில் வருபவனை நோக்கி நின்றிருந்தேன். அவன் செய்ய வரும் காரியமறிந்தும் பயமில்லாமல் அவனுக்காக காத்திருந்த என்னைக் கண்டு எனக்கே ஆச்சரியமாயிருந்தது.ஓடி வந்தவன் என் அருகே வந்ததும் தயங்கி நின்றான்.அவன் கண்களில் ஒரு மருட்சி! என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.அவனைப் பார்த்து முறுவலித்தேன்.இருவரின் கண்களும் ஒருகணம் சந்தித்தன. அந்த சந்திப்பில் அவனது வலி, துக்கம், அவமானம்,குழப்பம் எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டேன்.நான் அறிந்தேனென்பதை அவனும் உணர்ந்து கொண்டானென்று நினைக்கின்றேன்.அவனது கண்களில் சற்றே கண்ணீரைப் பார்த்தது போல் ஞாபகம்! பக்கத்திலிருந்தவன் எதோ கூற, அவனது கண்கள் மெதுவாக தரையினை நோக்கின. கையிலிருந்த அரிவாளினை
தடுமாற்றத்தோடு குறியில்லாமல் வீசுகின்றான். எனது வலக்கையினில் விழுகின்றது.அட! என்ன இது?..அரிவாள் வெட்டியும் வலிக்கவில்லையே! சுற்றிலும் ஓளியின் பிரகாசமானது அதிகரிக்கின்றதே? மனமானது மகிழ்ச்சியால் பூத்துக் குலுங்கியது.

எவ்வளவு அழகானது இந்த வாழ்க்கை?....

முற்றும்