Tuesday, April 24, 2007

செய்தி: உலகின் மொத்த துப்பாக்கிகளும் G8 எனப்படும் எட்டு முன்னேறிய நாடுகளில்தான் செய்யப்படுகின்றன.இவற்றில் ஜப்பான் மட்டுமே துப்பாக்கி விற்பனைகளை கட்டுப்படுத்தும் சட்டம் இயற்றியுள்ளது.

கேள்விப்பட்ட பொழுது சிரிக்காமல் இருக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிற்று. இந்த சின்ன உலகப்பந்துக்குள் எவ்வளவு போலி வேடங்கள்? தனிமனித உரிமை, பாதுகாப்பு, சுதந்திரம், என்று எத்தனையோ பேச்சுக்கள் கேட்டு காதுகள் புளித்து போயாயிற்று.இக் கருத்துகளை எல்லாம் தமக்கே சொந்தமென கருதும் நாடுகளே இத்துப்பாக்கிகளையும் ஏற்றுமதி செய்கின்றன..இதில் மட்டும் மேற்சொன்ன தனிமனித உரிமை, பாதுகாப்பு, சுதந்திரம் என்னவாயின என்று தெரியவில்லை. இது ஒருபக்கமிருக்கட்டும்..

இவற்றை காசு கொடுத்து வாங்கி சுதந்திரத்திற்காக போராடும்(அல்லது போராடுவதாக மார்தட்டும்) மூன்றாம் உலக தீவிரவாத அன்பரே! நீங்கள் கொடுக்கும் காசு முழுக்க முழுக்க நீங்கள் எதிரியாக கருதும் நாடுகளுக்கு போய் சேர்கின்றனவே! அது உமக்கு தெரிகிறதா? இல்லை நீரும் அவர்போல அச்சமயத்தில் மட்டும் கண்களை வேறுபுறம் திருப்பிக்கொள்விரா? அப்படி இருவரும் முகம் திருப்பிக் கொண்டீரானால், உங்களது போரினை என்னவென்று பெயரிட?

Wednesday, April 11, 2007

வியட்நாமின் சரித்திரத்தை படித்த பொழுது....

எங்கள் சுதந்திரம்...

கால தேவன் உறங்கிப் போன நாழி ஒன்றில்
காற்றின் கயிற்றினை பற்றி என்னுள் ஒருவன்
கீழிழுக்கும் பருமனை உதறித்தள்ளி மேலெழும்ப
உறக்கம் கலைந்து நடந்திடும் போர்தன்னை ரசிக்கலானேன்!

சரீரச்சிறையினை உடைத்தெறிந்த மகிழ்ச்சியில் நான்.
உடைத்து எழும்பியவனை பார்த்து ஏங்கியவண்ணம் இன்னொரு நான்.
இது எப்படி சாத்தியமென்று எண்ணியவாறு இன்னுமொரு நான்.
குழாயடிச்சண்டை போல ஒவ்வொருவனும் போட்டியிட்டான் - என்னுள்.

பன்பெரும் படைகளை வென்ற சோழனை போல
மேலெழும்பியவன் பிறனை வென்று கொக்கரிக்க,
நானும் ஆடை களைந்து, பருமன் தொலைத்து,
திரியினின்று வளரும் தீபம் போல அவனை தொடர்ந்தேன்..

புல்வெளியின் நீளமும் அகலமும் பரவி விரிந்து.
மேல் வந்த மேகத்தை விரைந்து சந்தித்து,
புதிதாய் பிறந்த மழைத்துளியுடன் சல்லாபம் செய்து
களைத்து போனதும் புவியை கண்டு விரைந்தோம்.

எம்மை கூண்டிலடைத்து, எங்கள் கிராமங்களை எறிய விட்டு,
சுதந்திர நாட்டை நிறுவியதாக மார்தட்டும் அன்பரே கேளும்!
பொழிந்த குண்டுமழையில் செவிடாய் போன உங்கள் காதுகளில்
சிறிதேனும் கேட்கும் திறனிருந்தால், கூர்தீட்டி கேளும்!

கொடுத்த கூலிக்கு யோசிக்கும் உம் நாட்டு வீணர்களுக்கு
எடுத்த அரிப்பை போக்க வளரும் செடியல்ல சுதந்திரம்.
வார்த்தைக்கு வார்த்தை வர்த்தகம் பேசும் உமது வாய்க்கு
ஒய்வில் அசை போட கிடைத்த வழிப்பண்டமல்ல சுதந்திரம்.

மனிதரை உடலாக எண்ணும், தசையின் அழிவை கண்டஞ்சும்
உங்களவர்க்கு புரிந்திட, ஒரு மரணமாவது வேண்டும்-எங்கள் சுதந்திரம்.
சரீரத்தின் ஆயுட்கைதியாக கருதும், விடும் மூச்சினை கைவிலங்காக அணியும்,
எங்களவரின் மரணத்தில், ஒரு துளியாவது விளங்கிடும்-எங்கள் சுதந்திரம்.