Tuesday, May 01, 2007

செய்தி: தமிழ்நாட்டைச் சேர்ந்த சில மீனவர் கடற்புலியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தவிர, இன்னும் சில மீனவர்கள் புலிகளால் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

என்றோ தமிழகத்திற்கு புரிந்திருக்க வேண்டிய உண்மை, இப்பொழுது வெளிவந்திருக்கிறது.இருப்பினும் அரசியல்வாதிகளால் அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? காலம் காலமாக தமிழினமென்னும் மாயவலையினை பின்னி வந்தவர்களாயிற்றே!இச்செய்தியினை தமிழ்நாடு எடுத்துகொண்ட விதத்திலிருந்தே தெரியவேண்டும், நம்மவர்களின் இரட்டைவேடம்! ஏன்?இதற்கு முன்னர் மீனவர் சுடப்பட்ட போதல்லாம், மத்திய அரசினிடம் கேட்டுத்தான் கண்டனம் இயற்றினீர்களா? இலங்கை அரசு என்றபோதல்லாம் புலியாக பாய்ந்த தமிழினமும் தமிழ்ச்சட்டமன்றமும் கூட, புலிகள் என்றதும் ஆடாக பதுங்கிவிட்டதே? தமிழ் இனம், தமிழர் கலாச்சாரம் என்று பேசித்திரியும் அரசியல் வாதிகள், முதலில் எந்த தமிழனை ஆதரிக்கிறார்கள் என்று முடிவு செய்யவேண்டும். ஆதரவோ, எதிர்ப்போ பாதிக்கப்படப் போவது நமது மீனவர்கள். அவர்களை காப்பதே நமது தலையாய கடமை.மற்ற விசுவாசங்களெல்லாம் இதற்கு பின்னர் என்று இருத்துவது நலம்.இனம், மொழி, மதம் போன்றவற்றால் மக்களை பிரித்துப்பார்க்கும் பொழுது எழும் அபாயம் இது எனப்புரிந்து திருந்தினால், தமிழ்நாட்டின் மக்களுக்கும் மீனவர்க்கும் விடிவுகாலம். ஆனால் எங்கே? ஓட்டிற்காக, இலங்கைக்கே கள்ளத்தோணியில் செல்லத்துணிந்தவர்களாயிற்றே நாம்!