Saturday, December 16, 2006

அட்லாண்டிக் சமுத்திரமும் சில நினைவுச் சிதறல்களும்...



சென்ற வார விடுமுறையினையொட்டி மியாமி கடற்கரை சென்றிருந்த போது என்னுள் ஏற்பட்ட நினைவலைகளை ஒருச்சேர்த்து பதிவிலிட முயன்றிருக்கிறேன். என்னடா கவிஞர் வைரமுத்து பாணியில தடபுடலா ஆரம்பிக்கிறானே என்று நெறய எதிர்பார்த்துறாதீங்க. அது என்னன்னா, பார்கிற வேலை அப்படி..ஆரம்பத்துலயே அமர்க்களம் பண்ணி ஊர ஏமாத்தி, அயர்ந்த நேரம் பார்த்து தலையில மாவரச்சிட்டு தப்பிச்சிட வேண்டியது..இதுதான் மென்பொருள் என்று சொல்லக் கூடிய, இந்தியாவின் அறிவுப்புரட்சி என்று பலரும் பாராட்டுகின்ற software job இன் அடிப்படைப் பண்பு.:)** படிக்கின்ற அன்பர்கள் கவனத்திற்கு..விளம்பரங்களில் வருகின்ற மாதிரி முந்தைய வரியின் பின்னால் ** போட்டுள்ளேன். பொதுவா இந்த கார் விளம்பரங்களில் பார்த்தீர்களானால், இந்த குறிப்பிட்ட வாகனம் லிட்டருக்கு 25கி.மி ஓடும் என்று குறிப்பிட்டு பின்னாடியே இப்படி ஒரு ** போட்டு, கீழே கண்ணுக்கே தெரியாத எழுத்தில் 'under test conditions' என்று போடுவார்கள். அதுபோல நானும் ஒரு நிபந்தனைவிதியிட்டு இருக்கிறேன்.ஆகவே மேற்குறிப்பிடப்பட்ட கருத்தோடு ஒத்துப்போகாத யாரேனும் என்னிடம் விவாதம் புரிய வருமுன்னர், ஒருமுறை அவ்விதியினை படித்துவிட்டு வருமாறு வேண்டுகின்றேன்.



'கத ரொம்ப நல்லாயிருந்தது.ஆனா வாரம் ஒருமுறையாவது எழுது..உன்னோட சொந்த அனுபவங்களையும், எண்ணங்களையும் எழுதினேனா இன்னும் சிறப்பா இருக்கும்.(கதைகளிலும் அதத்தான் எழுதுறனு சந்தேகிக்கிறேன்!!)' அப்படினு ஒரு நண்பன் (உன்னதாண்டா ....) கடிதமெழுதியிருந்தான்.முதல்ல அவனுக்கும், பதிவுகளை படித்துவிட்டு கடிதமெழுதியவர்களுக்கும், பின்னூட்டமிட்டவர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இனி வாரமொரு தடவை எழுதலாமென்று உத்தேசித்துள்ளேன்.(அப்படின்னா கட்சி காரியகமிட்டி மீட்டிங்கில் முடிவு பண்ணியாயிடுச்சினு அர்த்தமுங்க.ஆனா நடமுறைக்கு எப்ப வரும்னு கேட்டுறாதீங்க..எனக்கு பொல்லாத கோவம் வரும்..) அப்புறம் கதைகளிலும், கவிதைகளிலும் நான் எழுதுவது என்னுடைய அனுபவங்கள் அல்ல.அவ்வளவு சுவாரசியமான நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் நிகழ்வதுமில்லை.பிறர் வாழ்விலும் நிகழ்வதில்லை என்று சந்தேகிக்கிறேன். ஆனா அவைகள் முழுக்க முழுக்க கற்பனையுமல்ல.வாழ்வில் நம்மை பாதித்த சில நிகழ்வுகளின் பிரதிபலிப்பு, சில எண்ணங்களின் சாரல், இவையெல்லாம் கலந்து எழுதுகின்றேன்.

சரி..அட்லாண்டிக் கடற்கரைக்கு செல்வோமா?

1)இதோ....அட்லாண்டிக் மகா சமுத்திரம்.எனது கனவுகளில் மிக முக்கியமானதாக கருதும் பிரயாணக்கனவுகளில் அட்லாண்டிக் கடலில் கால் நனைப்பது என்பது மிகவும் பிரதானமானது.அப்படி என்ன அட்லாண்டிக் கடலில் என்கிறீர்களா? சரித்திரத்தை புரட்டி பார்த்தீர்களானால் நமது மனித சமுதாயம் தவழத்தொடங்கியிருந்த காலத்தில் எடுத்து வைத்த மிகப்பெரிய அடி இந்த மகாச்சமுத்திரத்தை கடந்தது.சரிவர வரைபடங்கள் இல்லாத, கண்தெரியாத ஆபத்துகளும், மரணங்களும் நிறைந்த அக்காலத்தில் இச் சமுத்திரத்தை கடக்க முயற்சிப்பதென்றால் எவ்வளவு நம்பிக்கை தேவைப்பட்டிருக்கும்? எத்தகைய பயங்களை வெல்ல வேண்டி இருக்கும்? எத்துணை நிந்தனைகளையும் கேலிப்பேச்சுக்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும்? இவற்றை எல்லாம் துச்சமென கருதி கப்பலேறி பல வீரச்செயல்கள் புரிந்தார்களே நமது முன்னோர்கள், அவர்களின் வழி வந்ததாக எண்ணும் பொழுது தேகம் பெருமையில் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. அத்தோடு ஒரு வித விவரிக்க முடியாத ஏக்கமும் கூட.பல நாட்கள் வெளிப்பிரதேசத்தில் வாழ்ந்துவந்தாலும், பிறந்த ஊரை தொலைக்காட்சியிலோ வலையிலோ பார்க்கையில் உள்ளே தோன்றுமே..அது போல.. அலைஅலையாக பொங்கி எழுந்து கரையோடு மோதி கடல் எழுப்பும் ஓங்காரக்குரல், புகமுடியாத ஒரு இருள்பிரதேசத்தில் நாம் தொலைத்துவிட்டு வந்த சொர்க்கபூமியை நினைவுறுத்திச் சென்றது. மிருகக்காட்சி சாலையில் வாழும் மிருகங்கள் போல பல கட்டுகளில் சிக்குண்டு, பொற்கூண்டுகளையும் விலங்குகளையும் சுகமாக எண்ணி வாழும் இன்றைய காலகட்டத்தில், சுதந்திரமாக கப்பல்களில் பறவைகள் போல சுற்றித்திரிந்த காலங்கள் முள்வேலி போல இதயத்தை நெருடி ஏங்க வைப்பதில் ஆச்சரியம் இருக்கிறதா என்ன?

2)கடற்கரையில் இருக்கும் மனிதர்களை பார்க்கின்றேன். உலகில் இருக்கும் எல்லா இனங்களிலிருந்தும் எல்லா நிறங்களிலும் மக்கள்.உடனே நண்பனின் குரல் நினைவிற்கு வருகின்றது.' தமிழர்கள் மற்ற இனங்களை விட விவேகமுடையவர்கள். கருப்பர்களில் இரண்டு வகை.ஒன்று மிக நல்லவர்கள்.இல்லாவிடில் மிகவும் கெட்டவர்கள்.யூதர்கள் மிகவும் தந்திரமானவர்கள். இசுலாமியர்கள் அப்படிப்பட்டவர்கள்.பார்சிகள் இப்படிப்பட்டவர்கள்.' மிகவும் தெரிந்தவனைப் போல இப்படியாக பல அவனது மொழியில் கூறினோமானால் 'வெவரமான' கருத்துகளை அடுக்கிக் கொண்டே போனான். அப்பொழுதும் இப்பொழுதைப் போலவே எனக்கு சிரிப்புதான் வந்தது. எவ்வளவு எளிதாக வருகின்றது இந்த இனப்பாகுபாடு.வளரும் முறைகளும் சுற்றுப்புறமும் செதுக்கும் ஒரு சிலை போன்றவனே மனிதன் என்பதை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா? இனங்களும் மதங்களும் விரிக்கும் மாயவலையில் தெரிந்தே போய் வீழ்கின்ற கூட்டத்தினை என்னவென்று சொல்ல? நமக்குள் இவ்வளவு ஓட்டைகளை வைத்துக் கொண்டு மேற்கத்திய நாகரிகம் பாகுபாடு பார்க்கின்றது என்று தயவு செய்து குற்றம் சாட்டாதீர்கள்..

3)மீண்டும் கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கும் மனிதரை பார்க்கின்றேன். முக்கியமாக பெண்களை. நீச்சலுடைகளில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த பெண்களை ரசித்தேன்..ஆம்..பெண்களின் வடிவழகு என்னை கவர்கின்றது.இது ஒரு இயற்கையான உணர்வு.ஆண்களின் மரபணுவில் முதன் முதலாவதாக எழுதப்பட்ட தன்மையாக இந்த ஈர்ப்புத்தன்மை இருக்கும் என்று நினைக்கின்றேன்.ஆனால் இதனை ஏற்றுக் கொள்வதில் எவ்வளவு தயக்கம்? எவ்வளவு வெட்கம்?குறிப்பாக இந்திய நாட்டின் திருமகன்களுக்கு இந்த ஈர்ப்புணர்வு புரிபடுவதே இல்லை என்று சந்தேகிக்கின்றேன். இல்லை புரிபட்டாலும் அதனை ஒரு வெட்கப்படவேண்டிய நிலையாகவே கருதுகின்றனர். போதாக்குறைக்கு அதில் கேலிப்பேச்சுகளும் வேடிக்கைகளும் வேறு. நமது இந்த நிலை தான் வெட்கி தலைகுனியவேண்டியது , ஈர்ப்புணர்வு அல்ல என்பது எப்பொழுது வெளிச்சத்திற்கு வரும்??

4)கடைசியாக,..நிலவொளி திகழும் அழகிய இரவினில் கடற்கரையில் அமர்ந்து பாரதி, தாகூர்,ஷெல்லி, பைரோன் போன்றவர்களின் கவிதைகளை படிக்க வேண்டும் என்கின்ற எனது நீண்ட நாள் கனவு என்று நிறைவேறும் என்று ஒரு ஏக்கம்.அன்றாட வாழ்க்கைச்சக்கரம் சீராக செல்ல, கிடைக்கின்ற வேலையில் சேர்ந்து வேறு வழி தோன்றாத காரணத்தால் இருக்கின்ற வழியில் வாழ முயன்று, அதனால் உருவாகும் பல கட்டுக்களையும் ஏற்று, நமது இயற்கையான இயல்பு நமக்கே மறந்து,வாழ்ந்து கழிக்கின்றோம்.ஏனிந்த நிலை? ஏன் இப்படி ஆகினோம்? நமக்கு பிடித்தமான செயல்களை மட்டும் செய்து ஏன் வாழ முடியவில்லை? எனக்கு தெரிந்து எனது நண்பர்களில் கவிஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள் என்று பல முகங்களை பார்க்கின்றேன்.ஆனால் சீவிக்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்திற்காக நாங்கள் செய்யும் வேலைகளோடு அடையாளப்படுத்தப்பட்டு போனோம். எமக்கு இயல்பாக வருகின்ற திறமைகளை கொண்டு பிழைப்பதற்கு வழி செய்யாத சமுகம், என்ன உயரமான நாகரிமாகவே இருந்தாலும் என்ன பிரயோசனம்? இவ்வளவு முன்னேற்றங்கள் நிகழ்ந்துதான் என்ன பயன்?

1 comment:

The Lonely Backpacker said...

okay...but u had a choice to do IAS which u rejected....