Sunday, November 12, 2006


ஒரு நாளாகவேனும்

உலகில் உள்ள நூறு கோடியே அறுபத்து ஒன்பது லட்சம் சிறுவர் சிறுமியரில் ஒரு சிறுவனும் சிறுமியும் அன்று அந்த மலையடிவாரத்திலுள்ள பாறை ஒன்றின் மேல் வானத்தை பார்த்தபடி படுத்திருந்தனர்.

"டேய் கண்ணா! வானம்னா என்னடா? அதுல என்ன இருக்கும்?"

கேட்ட இரட்டை சடை வாண்டின் பெயர் கமலா. கோடை விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு சென்றே தீருவேனென்று அடம்பிடித்து உண்ணாவிரதமிருந்து இன்னும் என்னென்னமோ போராட்டங்கள் நடத்தி தந்தையிடம் புரட்சிதலைவி என்ற பட்டப்பெயரும் வாங்கி இங்கு வந்து வானம் பற்றி அதிமுக்கிய ஆராய்ச்சி நடத்துகின்றாள்.

பாட்டி வீடும், அந்த கிராமமும் அவளுக்கு மிகவும் பிடித்தமென்றாலும், அங்கே வருவதற்கு அவளுக்கு இருந்த மிகமுக்கிய காரணம், கண்ணன்.வயதான பிறகு நாம் பாராட்டும் நட்புகளில் பலவகை உண்டு. அலுவலக நட்பு, அரட்டை நட்பு, காதலுக்கு முந்தைய நட்பு, சில நேரங்களில் பணத்தேவைக்காக கூட நட்பு பாராட்டுகின்றோம். ஆனால் சிறுவர்சிறுமியர் அறிந்தது ஒரே ஒரு நட்பு. அது தன் நண்பரை தன்னுடைய இன்னோரு உயிராக கருதுவது. கண்ணனையும் கமலாவையும் கோடைகால விடுமுறை நண்பர்கள் என்று கூறலாம். இருவரது தாத்தா பாட்டியும் ஒரே ஊரில் வாழ்ந்து வந்ததாலும், இருவருக்கும் அக்கிராமமும் அதனருகே இருந்த மலையும் மிகவும் பிடித்தமென்பதாலும், இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இருவரும் சிறுவராக இருந்ததினாலும், காந்தத்தினை கண்ட இரும்பை போல் இயற்கையாகவே ஈர்க்கப்பட்டு நெருங்கிய நண்பராயினர்.

"வானம் வந்து சாமியோட குட. நம்மளயெல்லாம் காப்பாத்துறதுக்காக சாமி குட பிடிச்சு நிக்கார்."

இது நமது கண்ணன். கண்ணனுடைய தந்தை சிறுவயதிலிருந்தே இறைபக்தியில் திளைத்து இந்துமதக்கொள்கையினில் சிறிதும் பிறளாமல் தம்மைப் போலவே பிற உயிர்களையும் நேசித்து வாழ்பவர்.தாய்மீனைப் பார்த்து நீஞ்சக் கற்றுக்கொள்ளும் மீன்குட்டி போல கண்ணனும் பக்திவழியே சென்றுகொண்டிருந்தான்.

கலகலவென்று சிரித்தாள் கமலா.

"மழ பெய்யும்போது சாமி குடய மடக்கி வச்சிடுமா? இல்ல சாமி குட ல அவ்வளோ ஓட்டை இருக்கா?"

கமலாவின் தந்தை கல்லூரி பேராசிரியர்.நாட்டின் பகுத்தறிவு இயக்கத்தின் முக்கிய தூண். நாத்திகம் அதனால் கமலாவிற்கு இயற்கையாகவே வந்தது.


"இப்படிலாம் பேசுனா சாமி கண்ண குத்திடும்.",என்றவாறே கன்னத்தில் போட்டுக்கொண்டான் கண்ணன்.

"நம்மளயெல்லாம் காப்பாத்துறதுக்குத்தான் சாமி இருக்கார்னு சொன்ன?இப்ப சாமி கண்ண குத்திடும்னு சொல்ற? "


கமலா கேட்டது கண்ணனுக்கு பயத்தை அளித்தாலும், உள்ளூர அவளது அறிவினை ரசித்தான்.பின்பு ஒரு இரவுக்காலம், தெரு விளக்கின் அடியில் அக்கிராமச்சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி ஆடினார்கள் இருவரும்.

"என்னமா ஓடுறான்டா ராமு.புடிக்கவே முடியல்ல."


"இதெல்லாம் என்ன பெரிசு.எங்க ஸ்கூலில் நாங்க கண்ணாமூச்சி ஆடறப்போ முதல்மாடியிலிருந்து கீழே குதிச்சு பக்கத்து மரத்துல ஏறி ஓளிவேன்."

"அப்படியாடா?முதல்மாடில இருந்து கீழே குதிச்சா அடிபடாதா?"


அவன் பொய் சொல்கிறான் என்று அவளுக்கும் தெரியும்.ஆனால் ஏனோ அவளுக்கு அது நிரம்ப பிடித்திருந்தது.கோடைக்காலமானது இப்படியாக அவர்களின் மொட்டுவிட்டு மலர ஆரம்பித்த மனங்களின் கொள்கை விவாதமாகவும்,பல புதிய விசனங்களை கற்றுக்கொள்வதிலும் கழிந்தது.


வருடங்களுக்கு வயதாயிற்று.மீண்டும் ஒரு கோடைக்காலம் வந்தது.கூடவே கமலாவும் கண்ணனும்.அதே பாறை முகட்டில் அமர்ந்திருந்தனர் இருவரும். ஆனால் இந்தமுறை இன்னொரு விருந்தாளியாக மௌனமும் வந்தமர்ந்திருந்தது.

"ஏண்டா கண்ணா அமைதியா உக்கார்ந்திருக்க?"

"ஓண்ணுமில்ல கமலா." என்ற கண்ணனை ஆழமாக பார்த்தாள்.

"யார லவ் பண்ற நீ?"


கமலாவை அதிர்ந்து போய் பார்த்தான் கண்ணன்.

"உனக்கு எப்படி தெரிஞ்சுது?"

"இது தெரியாதாடா? எங்க கிளாஸ்லயும் கொஞ்ச பசங்க உன்ன மாதிரிதான் கிறுக்கா சுத்திட்டு இருக்காங்க."

என்ற கமலாவை கல்லேறிந்தவாறே விரட்டி ஓடினான் கண்ணன்.பின்னர்,அன்று இரவு தெருவிளக்கினோரம் அமர்ந்து பறவைகளின் ஒலிகளை கேட்டுக் கொண்டிருக்கையில் மெதுவாக கூறினான்.

"அவ பேரு மீனா.எங்கிளாஸ்ல படிக்கிறா."

முறுவலித்தாள் கமலா.


"ஏண்டா?"

"ஏண்டான்னா?"

"ஏன் லவ் பண்ற அவள?"


"ம்ம்ம்..தெரில..அவ அழகா இருப்பா.ரொம்ப நல்லா படிப்பா.நேத்து கூட கனவுல வந்தா தெரியுமா?"

"கனவுல வந்தாளா? எப்படி வந்தா?"

வெட்கத்தில் கன்னம் சிவக்க சொன்னான் கண்ணன்.

"அது எங்க கல்யாண மேடை.நானும் அவளும் கைய பிடிச்சு நெருப்ப சுத்தி வாறோம்."

மீண்டும் அவன் பொய் சொன்னான்.ஆனால் இந்த முறை அவளுக்குத் தெரியவில்லை.

"சூப்பர்!!அதுக்குள்ள கல்யாண கனவா?சொல்லிட்டியா அவகிட்ட?"

"இல்ல.சொல்லல.பயமா இருக்கு!!"

"கமலா!சாப்பாடு ரெடி..கண்ணனையும் கூட்டிட்டு வா!சாப்பிடலாம்.!! ".அம்மாவின் சத்தம் கேட்டது..

"இந்தா வந்துட்டேன்மா.கண்ணா! வாடா சாப்பிடலாம்.."

வீட்டிற்குள் வந்து அமர்ந்தார்கள் இருவரும்.சாப்பிட்டு முடித்தவுடன்..


"மா! கண்ணன் லவ் பண்றானாம்மா!" கண்களில் குறும்பு கொப்பளிக்க உரக்கச் சொல்லினாள் கமலா.தூக்கிவாறிப் போட்டது கண்ணனுக்கு.இந்த உலகம் பிளந்து தன்னை முழுங்கிவிடாதா என்று கண்ணன் எண்ணிக்கொண்டிருக்கையில்..

"என்னடா கண்ணா! இந்த வயதிலேயே லவ்வா!"

"இல்ல ஆண்ட்டி!சும்மா,விளையாட்டுக்கு சொல்றா! அம்மா தேடுவாங்க.நான் வர்றேன் ஆண்ட்டி.கமலா! நாளக்கி பாக்கலாம்."

தப்பி ஓடினான் கண்ணன்.


"என்னடி லூசுக்கழுத.அவன் உன்கிட்ட நம்பிக்கையா ஒரு ரகசியம் சொன்னா இப்படித்தான் போட்டு ஓடக்கிறதா? என்ன நெனப்பான் உன்ன பத்தி!"

"ஓன்னும் நெனக்க மாட்டான்மா.நம்ம கண்ணந்தானேம்மா!ஆனா எப்படி ஓடினான் பாத்தியா?"

கல கலவென்று சிரித்தாலும் மனது ஏனோ வலித்தது நம் கமலாவிற்கு.

இரவு அப்பாவின் மடியில் அமர்ந்து சாய்வு நாற்காலியில் ஆடும்பொழுது மெதுவாக கேட்டாள்.

"அப்பா! நான் கறுப்பா பா?"


"சீ....இல்லடி செல்லம்!நீ......"ஆரம்பித்த அம்மாவினை தடுத்து நிறுத்தியது அப்பாவின் குரல்.

"ஆமாடா தங்கம்.நீ கறுப்பு..அழகான கறுப்பு.."

"கறுப்பு எப்படிப்பா அழகாகும்?"

"ஏன்? அழகுன்னா என்னடா?"

"அழகுன்னா எல்லொருக்கும் பிடிச்சிருக்கும்.அதான் அழகு. அரவிந்சாமி மாதிரி!!"

"அப்ப எல்லொருக்கும் ரஜினிகாந்த பிடிக்காதா?"

"ரஜினிகாந்தயும் பிடிக்கும்!! "

அப்பாவிடம் கமலாவிற்கு பிடித்தது இதுதான். தனது கருத்தை வெளிப்படையாக கூறமாட்டார்.அனால் கேள்விகள்,பதில்கள் மூலம் தான் கூற வந்ததை விளக்கிவிடுவார்.

"தோலின் வர்ணம்தான் அழகாடா?"

மீண்டும் அப்பா தொடர்ந்தார்.

"இல்லப்பா. ஆனா..".பதிலளிக்க முடியாமல் திக்கினாள் கமலா..

"ஆனா?"

"எல்லொருக்கும் செவப்புதாம்ப்பா பிடிக்குது.அம்மாகூட அந்த கல்யாணத்துல பொண்ணு நல்லா செவப்பா இருக்கானு தான சொன்னா?" குரல் கம்மச் சொன்னாள் கமலா.

"பூமி உருண்டையா தட்டையா டா?"

"உருண்டைப்பா. " எதற்காக கேட்கிறாரென்று தெரியாவிட்டாலும் பேச்சின் சூடு குறையாமலிருக்க உடனடியாக கூறினாள்.

"நீ இந்த பதில முன்னூறு வருசத்துக்கு முன்னாடி இங்கிலாந்துல சொல்லியிருந்தீன்னா உன்ன தெருவில் கம்பத்தில் கட்டி எறிச்சிருப்பாங்க!"

சட்டென்று புரிந்தது கமலாவிற்கு.ஆனாலும் பேச்சை வளர்ப்பதற்காக கேட்டாள்..

"அப்ப செகப்புதான் அழகுன்றது உண்மையில்லையாப்பா?"

"வெள்ளக்காரங்க இந்தியா வந்தப்ப கருப்பா இருக்கிற இந்தியர்கள ஆள்வது கடவுள் வெள்ளயர்களுக்கு கொடுத்த சும னு சொல்லி ஆண்டாங்க.அவங்கள வாயப்பிளந்து பாத்துட்டு இருந்ததால இன்ன வரக்கும் நாமும் அதயே உண்மைனு நம்பி வாழ்ந்து வாரோம்."

அப்பா கூறியது புரியாவிட்டாலும் மனதுக்கு இதமாக இருந்தது கமலாவிற்கு.நாளை கண்ணனிடம் இதனை விவாதிக்க வேண்டும் என முடிவு செய்துகொண்டாள்.

வருடங்கள் மீண்டும் ஓடின...வளர்ந்துவிட்ட காரணத்தினால், கிராமத்தின் மண்வாசனையும், மலைக்குன்றுகளும் இருவரையும் ஈர்க்கத்தவறின.

கண்ணனின் வாழ்க்கையில் முதல் காதல் தோல்வியுற்று அவனை துக்கத்திலாழ்த்தியது..இரண்டாம் காதல் வெற்றி பெற்று மிகவும் துக்கத்திலாழ்த்தியது.

கமலாவோ புத்தகங்களோடு வாழ்ந்தாள்.புதிது புதிதாக நிரம்ப கற்றுக்கொண்டாள்.பள்ளியிறுதித்தேர்வில் மாவட்டத்தில் முதலாவதாக வந்தாள். என்ன செய்யப் போகிறாய் என்று தந்தை கேட்டபொழுது சற்றும் யோசிக்காமல் பதிலளித்தாள்.

"மருத்துவம் பயிலப் போகிறேன்!"

"மிக்க நல்லது. நீ இங்கு பயில்வதைவிட அமெரிக்காவிற்கு போ. அங்கு நிரயக் கற்றுக்கொள்வாய்.."என்றார் அப்பா.

அமெரிக்கா செல்லுமுன்னர் விடைபெற்றுக்கொள்ள பாட்டி வீட்டிற்கு வந்தாள். விதியென்று கூறலாம்.இல்லை எதிர்பாராத இனிய நிகழ்வு என்றும் கூறலாம்.எவ்வாறாக எடுத்துக்கொண்டாலும் கமலாவிற்கு மிக்க மகிழ்ச்சி தந்தது அங்கே கண்ணனுடைய வரவு.இருவரும் வீட்டு முகப்பில் அமர்ந்திருந்தனர்.சொல்வதற்கும் கேட்பதற்கும் நிரம்ப இருந்தாலும், ஏனோ அந்நியப்பட்டுப் போகினர்.

கண்ணன் அப்பொழுது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். நகர வாழ்க்கையினாலும் கல்லூரிவாசமும் நிரம்ப கற்றுக் கொடுத்திருந்தன.தன்னைப்பற்றியும் உலகைப் பற்றியும் தெரிந்துகொள்ளத்துவங்கும் பருவத்தில் இருந்ததனால் மிகவும் அமைதியாக மாறி இருந்தான்.

மௌனம் போர்க்கொடி கட்டி சண்டைபிடிக்க துவங்கியது.அசௌகரியமாக உணர்ந்தனர். எங்கோ அலைமோதிக் கொண்டிருந்த கண்கள் மோதுகையில் கஷ்டப்பட்டு முறுவலித்தனர். கமலா தான் அந்நிலையை உடைத்தாள்.

"நகர வாழ்க்கை எப்படிடா இருக்கு கண்ணா?"

"நல்லாருக்கு கமலா.ரொம்ப வித்தியாசமா இருக்கு."

"லீவ் நாள்ல என்ன பண்ணுவ?"


"எங்கயாவது வெளில பார்கு,பீச்சு னு எல்லாரும் சேர்ந்து போவோம்.."

"எல்லாரும்னா?"

"எல்லாரும்னா கூட படிக்கிறவங்க எல்லாரும்.."

"பொண்ணுங்களுமா?"

"ஆமா!பொண்ணுங்களுந்தான்.!ஏன் கேட்குற?"

"இல்ல.சும்மாத்தான்!!"

இன்னும் பல சம்பந்தமில்லாத விசனங்கள் பேசி சிரித்தனர்..

"கிளம்புறேன் கண்ணா!" அவனை ஆழமாக பார்த்தாள்!

"சரி கமலா! நல்லா படி..முடிஞ்சா லெட்டர் போடு..உடம்ப பார்த்துக்க!"

மீண்டும் நாட்கள் ஓடின.முடிவாக அந்த நாள் வந்தது..அன்று கண்ணன் கல்லூரி விடுதியில் தொலைக்காட்சி அறையில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தான்.

"இன்னக்கி கமலா பிளைட் ஏறி இருப்பா.என்ன நினைச்சிட்டிருப்பா? பயப்படுவாளோ?சே சே!கமலாவாது பயப்படுவதாது?"

முக்கிய செய்தி!!அமெரிக்கா செல்லும் விமானம் இன்று இயந்திரக்கோளாறினால் வெடித்துச் சிதறியது. பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருப்பர் என்று அஞ்சப்படுகின்றது.

நினைவுக்குதிரையில் பறந்து கொண்டிருந்த கண்ணனை சொடுக்கென்று லகான் இழுக்கப்பட்டு நிறுத்தியது தொலைக்காட்சியில் வந்த செய்தி.மனதில் நூறு விமானங்கள் வெடித்துச் சிதறின.வெடித்த சிதறல்களெல்லாம் கண்ணாடித்துண்டுகளாக மாறின. அக் கண்ணாடித்துகள்கள் ஒவ்வொன்றிலும் கமலாவின் முகம் சிரித்தது..

அவசரம் அவசரமாக கமலாவின் அப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

"அங்கிள்! கமலா!.........."

"ம்ம்ம்............."

விம்மல் சத்தம் கேட்டது பின்னணியில்.ஆண்ட்டியாக இருக்கும்...

வலி,துக்கம், அழுகை எல்லாவற்றிற்கும் கண்ணன் உணர்வற்று, மரத்துப் போனான்.தன்னில் ஒரு முக்கியபகுதி அமைதியாக இறந்து போக கண்டான். அது போல் இன்னுமொரு பகுதி எங்கிருந்தோ தன்னில் வந்து அமர்ந்ததையும் உணர்ந்தான். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக..தனித்துப் போனான்..ஓட்டினுள் ஒடுங்கும் ஆமை போல் மேலும் மேலும் தனக்குள்ளே ஒடுங்கிப் போனான்..

காலம் மீண்டும் சுழன்றது.கூடவே நமது கண்ணனும். நல்ல வேலையில் அமர்ந்தான். திரைகடலோடி திறை தேடினான். சமுகத்தின் பார்வையில் உயர்ந்தான். எங்கு சென்றாலும் மனிதர் சூழ்ந்தனர்.அவனின் நட்பு நாடினர். காதல்களும் தேடி வந்தன. ஆயினும்..நட்பு காட்டி பல்லிளித்த விகாரங்களை அடையாளம் கண்ட பொழுதும், பொய்யான காதல்களால் புண்பட்ட பொழுதும், உண்மையான உறவுகளுக்கு ஏங்கிய ஒவ்வொரு நொடியின் பொழுதும்....இழந்த இழப்பின் பரிமாணம் அவனை தாக்கியது. அன்றில் பறவையாக உணர்ந்தான். உயிரை மாய்த்துக் கொள்ளவோ அவனது பகுத்தறிவு இடம் தரவில்லை. அவனது நிலைக்கு அவனே தீர்வும் கண்டான். வாழும் வாழ்க்கையினை பிறப்பினால் ஏற்பட்ட கடமையாக எண்ணி வாழ முற்பட்டான். வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், மனிதர்கள் எதுவும் அவனை பாதிக்கவில்லை. ரயிலின் ஜன்னல் வழியே காட்சிகளை பார்த்து செல்லும் தனியான பயணி போல் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் ஓட்டாமல் மிதந்து சென்றான்.

"ஒரு நாளாகவேனும், ஒரு நொடியாகவேனும்..கமலாவை பார்க்க வேண்டும். இவ்வுலகை பற்றி நான் அறிந்ததெல்லாம் கூற வேண்டும்.என்னுள்ளே நான் புதைத்து வைத்த ரகசியங்களை, எனது வலிகளை,எனது அவமானங்களை அவளிடம் உரைக்க வேண்டும்.பின்னர் அவளுடனே அவளிருக்கும் உலகிற்கு சென்றுவிட வேண்டும்.."


இதுவே அவனது தீராத வேட்கையாயிருந்தது.மீண்டும் காலங்கள் ஓடின.கண்ணனிற்கு திருமணமாயிற்று. திருமணமாகிய முதல்நாள் இரவு அவனும் அவனது மனைவியும் ஒரு பெண்குழந்தையை தத்தெடுக்க வேண்டுமென்று முடிவுசெய்தனர். அதற்கான வழிமுறைகளை ஆலோசனை செய்த பொழுது அவன் மனைவி கேட்டாள்.

"குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?"

கண்ணன் தீர்க்கமாக பதிலளித்தான்.

"கமலா...."

முற்றும்..


2 comments:

Ange said...

Hmm... It was very Intense and Beautiful da.. :)

Anonymous said...

excellent one..
infact i was thinking abt a similar story today :D
me into L&T , bombay for summers...finance profile..:D