Thursday, November 02, 2006

சொல்லடி சிவசக்தி!

பிணங்களை உண்டு வாழும் நரிக்கூட்டம் நடுவில் வாழ்கையில்,

நானும் பிணமாகமாட்டேனோ என்றெண்ணத் தோணுதடி!!

பொய்மையும் பசப்பும் நிறைந்த மாக்கள் கூட்டம் காண்கையில்,

குருடாகவேனும் வாழ நின்னிடம் மன்றாடத் தோணுதடி!!

பகுத்தறியென்றால் வெறுத்தோட்டங் காணும் ஆட்டுமந்தையில்,

இன்னுமொர் ஆடாகிப் போவேனோ என்றஞ்சத் தோணுதடி!!

சார்ந்தோரின் சாம்புதற்கிணங்கி துணைதேடி நிற்கையில்

மாண்ட காதல் பலவும் மனதில் வந்தோடுதடி!!

நின்னையொத்த பாவைதனை திசையெங்கும் தேடுகையில்

காணாமல் தோற்றேமாந்தது எந்தன் பிழையோடி!!

தூய்மையான காதலென நினைத்தது பொய்யாகக் காணுகையில்

வேற்கம்பினால் பிளந்தது போல் நெஞ்சு துடிக்குதடி!

நட்பினில் நேர்மையானது வழக்கொழிந்தே போகையில்

மனம் படும் பாட்டினை நீ அறிவாயோடி!!

ஊராரின் பிழைபலவற்றை மற்றவர் மறந்தே நிற்கையில்,

அவ்வாறியலாமல் நான் மட்டும் உழல்வதேனடி!!

மதமென்னும் புறைகட்டி மக்கள் பார்வையிழந்தே போகையில்,

அதம் செய்தே தர்மம் காத்திட நீ வருவாயோடி!!

முன்னேற்றங்கள் பல நிகழ்ந்தாலும் இன்னமும் சாதிச்சகதியில்

புரண்டே மகிழும் சமுகத்தை என்னதான் செய்வாயடி!!

சொல்லடி சிவசக்தி!

சுடர்மிகு அறிவுடன் எனைப் படைத்தாய் நீ!!

2 comments:

Lakshmi said...

excellent....
aana last line thaan idikuthu..just kidding...good job...

Lakshmi said...

excellent....
aana last line thaan idikuthu..just kidding...good job...